இதுவரை இரட்டை இலை வெற்றி பெறாத சட்டமன்றத் தொகுதி, திருவாரூர். 2016 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலேயே அதிக ஓட்டு வித்தியாசத்தில் (68,326 வாக்குகள்) திருவாரூரில் வென்றவர் கலைஞர். அவரை எதிர்த்து நின்ற ஆளுங்கட்சியான அ.தி.மு.க. வேட்பாளருக்கு டெபாசிட் தேறியதே பெரும்பாடு. மண்ணின் மைந்தரான கலைஞருக்குத் திருவாரூர் தொகுதி மக்கள் கொடுத்த பேராதரவு அது. அவரது மறைவுக்குப் பிறகு நடைபெறும் இடைத்தேர்தல் களத்தின் நிலவரம் எப்படி?
இரட்டை இலை வெற்றி பெற்ற திருப்பரங்குன்றம் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தலை அறிவிக்காமல், உதயசூரியன் வென்ற திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தேர்தலை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பல சந்தேகங்களை எழுப்பி, விவாதப் பொருளாக்கியிருக்கிறது. மோடியின் நல்லாசியுடன் எடப்பாடிக்கு வழங்கப்பட்டுள்ள பொங்கல் போனஸ் தான் இந்த இடைத்தேர்தல் என்று பார்க்கப்படுகிறது. திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மனுவில் ஜெ. வைத்த கைரேகை, உணர்வுடன் பெறப்பட்டதா என்பது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இருப்பதாலும், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள் அப்பீல் செய்ய அவகாசம் இருப்பதாகவும் அங்கு தேர்தல் நடத்தப்படாததற்கு சமாதானம் சொல்கிறது ஆணையம். அ.தி.மு.க. மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையோ, ""இப்போது "கஜா புயல் நிவாரணப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையிலும், பொங்கல் பண்டிகை காலத்திலும் திருவாரூர்
தொகுதிக்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருப்பது எங்களுக்கு வியப்பாக இருக்கிறது' என ஆச்சர்ய ரியாக்ஷன் காட்டுகிறார். ஒரு தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு குறித்த சந்தேகத்தை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார் விடுதலைச்சிறுத்தைகள் திருமாவளவன்.
சி.பி.ஐ.யின் தேசியச்செயலாளர் ராஜா, தேர்தலை தள்ளிவைக்கச் சொல்லி மனுகொடுத் தும் பலனில்லை. டெல்டா பாசன விவசாயிகள் சங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை கேட்டும், தடை விதிக்க மறுத்துவிட்டது நீதிமன்றம். இப்போது வரை கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சியினரோடு சேர்ந்து பொதுமக்கள் கஜா நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். நிவாரணம் கிடைக்கவில்லை என கண்டன ஆர்ப் பாட்டத்தை நாகப்பட்டினத்தில் நடத்திய நாம் தமிழர் கட்சியோ திருவாரூர் தொகுதிக்கு பொடா சாகுல் ஹமீதை வேட்பாளராக அறிவித்துள்ளது.
தி.மு.க.வைப் பொறுத்தவரை, கலைஞரின் தொகுதியில் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் நிற்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பே அதிகம். கலைஞர் போட்டியிட்ட 2011, 2016 சட்டமன்றத் தேர்தலின் போது, அவருக்காக தொகுதியின் அனைத்து கிராமங்களிலும் பிரச்சாரம் செய்தவர் அவர் மகள் செல்வி. அவரையோ கனிமொழி யையோ நிறுத்தினால் 100% வெற்றி உறுதி என்ற பேச்சு பொதுமக்களிடமிருந்தே வெளிப்பட்டது. குடும்ப அரசியல் என்ற பேச்சைத் தவிர்க்க நினைக்கும் ஸ்டாலினிடம் கட்சியின் சீனியர்களோ, “"தலைவரின் மகன் என்ற முறையிலும் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் நீங்களே நிற்கலாம்'’என வலியுறுத்தினர். கலைஞர் உடல்நலன் குன்றியிருந்தபோதே திருவாரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றவர் ஸ்டாலின். பொதுத்தேர்தலில் அவர் திருவாரூரில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு மிகுந்துள்ள நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிடச் சொல்லி வலியுறுத்தியதை அவர் நிராகரித்துவிட்டார். திருவாரூரில் கள மிறங்கி, கொளத்தூரில் இடைத்தேர்தலைத் திணிக்க ஸ்டாலின் விரும்பவில்லை.
உதயநிதியை நிறுத்துவது பற்றியும் பேசப்பட்டது. அவருக் காக விருப்பமனுவும் தாக்கல் செய்தனர். ஆனால், மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன்தான் தி.மு.க தரப்பில் அதிகம் பரி சீலிக்கப்பட்டார்.
1 லட்சத்து 39169 பெண் வாக்காளர்கள், 1லட்சத்து 27500 ஆண் வாக்காளர்கள், 18 மூன் றாம் பாலினத்தவர்களின் வாக்குகளையும் கொண் டுள்ள திருவாரூர் தொகுதியில் பட்டிய லின சமூக வாக்குகள் முதன்மையானவை. அது போலவே முஸ்லிம்கள், பிள்ளைமார் சமூக வாக்குகள் முக்கிய பங்காற்றுபவை. பூண்டி கலைவாணன், முக்குலத் தோர் சமூகத்தவர். இந்த இடைத்தேர்தல் களத் தின் வெற்றி என்பது தி.மு.க.வின் அரசியல் எதிர்காலத்திற்கும் மு.க.ஸ்டாலினின் தலை மைப் பொறுப்புக்கும் முதல் சவால் என்பதால் கலைஞர் ஆட்சிக் காலத்தில் திருவாரூருக்கு செய்யப்பட்ட நன்மை களையும், கலைஞர் மீது திருவாரூர் மக்களுக்கு உள்ள அபிமானத்தையும் முன்வைத்து களப்பணியாற்றத் தீவிரமாகியுள்ளது.
அ.தி.மு.க.வினரோ, ""ஆர்.கே.நகரில் காட்டிய அலட்சியத்தால், ஓட்டுக்கு 6000 ரூபாய் கொடுத்தும் தோல்வியை சந்திக்க வேண்டிய தாகிடுச்சி, இதுவரை வெற்றி பெற முடியாத திருவாரூரில் இந்தமுறை வெற்றிபெற்றால் நான்கு மாதங்களுக்கு பிறகு வரும் பாராளு மன்றத் தேர்தலுக்கும் உதவியாக இருக்கும்'' என்கிறார்கள்.
அ.தி.முக.வினரின் தேர்தல் திட்டம் குறித்து மாவட்ட அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரிடம் விசாரித்தோம், ""திருவாரூர் இடைத்தேர்தலுக்கு 500 கோடி வரை செலவு செய்யவது என்கிற முடிவுக்கு வந்துவிட்டோம். 20 பேருக்கு ஒருவர் என்கிற விகிதத்தில் அணிகள் பிரித்துவிட் டோம். வரும் 13-ம் தேதிக்கு பிறகு பூத்கமிட்டி அலுவலகத்திற்கு வரும் ஒரு நபருக்கு தினமும் 500 ரூபாய் விகிதம் கொடுக்க முடிவெடுத்துள்ளோம். அப்படி தேர்தல் தேதிவரை கொடுத்தால் வாக்கு சிதறாமல் இருக்கும் என்பதற்குத்தான் இந்தத் திட்டம். அதோடு ஆர்.கே.நகர் பாணியில் இங்கும் வாக்காளர்களுக்கான பட்டுவாடா வெயிட்டாக இருக்கும். மாவட்டம் முழுவதும் உள்ள ஒ.செக்கள் உள்ளிட்ட சிலர் கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்துள்ளனர். அவர்களுக்கு ஒரு பகுதியாக பிரித்துக்கொடுத்து உணவு மற்றும் சகல வசதிகளையும் செய்துகொடுக்க திட்டமிட்டுள்ளோம். எப்படி தி.மு.க.வின் கோட்டையா இருந்த சென்னை, அ.தி.மு.க. வசமானதோ அதுபோல கலைஞருக்குப் பிறகு திருவாரூரும் எங்க பக்கம் மாறும்'' என்றார் தெளிவாக.
தி.மு.க.வை ஜெயிக்கவிடக்கூடாது என்பதற்காக வேட்பாளர் தேர்விலும் அ.தி.மு.க. முன்கூட்டியே வியூகம் வகுத்தது. தி.மு.க.வில் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் நின்றால், அவரது குடும்பத்துடனான மோத லால், கணவனை இழந்துள்ள கோவி.சம்பத்தின் மனைவியை களமிறக்குவது,
உடையார் சமூகத்தை சேர்ந்த தியாக பாரிக்கு தி.மு.க.வில் சீட் என்றால், அ.தி.மு.க.வில் பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்த கலியபெரு மாளையோ, அவரது மனைவி மலர்விழி யையோ நிறுத்துவது. உதயநிதி, டி,ஆர்,பாலு என செல்வாக்குள்ளவர்களை நிறுத்தினால், இஸ்லாமிய சமுகத்தவரான கூத்தாநல்லூர் முகமது அசரப் என்பவரை இறக்குவது. ஸ்டாலினே நின்றால் முன்னாள் எம்.எல்.ஏ அசோகனை களமிறக்கி தலித் சமூக வாக்குகளைப் பெறுவது... என வியூகம் வகுத்ததுடன், இந்த பரிசீலனைப் பட்டியலில் ஒசெ. மணிகண்டனையும் சேர்த்து கட்சியின் ஆட்சிமன்றக் குழுவின் பார்வைக்குக் கொண்டுசென்றனர்.
"திருவாரூரில் ஜெயிப்பது ஒன்றுதான் எங்கள் நோக்கம்' என பெங்களூரு சிறையில் சசிகலாவை சந்தித்துவிட்டுத் திரும்பிய தினகரன் சொல்லியிருக்கிறார். அவரது அ.ம.மு.க. சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ். காமராஜ், கலைஞரை எதிர்த்து 2011-ல் போட்டியிட்ட குடவாசல் ராஜேந்திரன், திருவாரூர் நகரச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் போட்டியிட விருப்பம் தெரிவித் திருந்தனர்.
"உங்க ஏரியா எப்படி இருக்கு?' என அ.ம.மு.க.நிர்வாகி ஒருவரிடம் நாம் கேட்ட போது, ’’""ஆர்.கே.நகர் பார்முலா இங்கேயும் எங்களுக்கு வெற்றி கொடுக்கும். கூடுதலாக தங்களது குடும்பத்தின் உறவினர்களை தேர்தல் சமயத்தில் பணம் உள்ளிட்ட வகையில் உதவ சொல்லியிருக்கிறார் சசிகலா. அதனால் கும்ப கோணம், பாபநாசம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பணம் உதவி செய்யவும் தயாராக இருக்கின்றனர். எஸ்.காமராஜ்தான் ஸ்ட்ராங்கான வேட்பாளர். அவருக்கென தனி செல்வாக்கு இருக்கிறது. அதோடு தி.மு.க.வில் கலைவாணனுக்கு சீட் கிடைக்கலன்னா முக்குலத்தோர் வாக்குகள் முழுமையாக எங்களுக்குக் கிடைத்துவிடும். இங்கே தி.மு.க.வுக்கும் எங்களுக்கும்தான் போட்டி. அ.தி.மு.க.வில் நிறைய குளறுபடி இருக்குது. கடைசி நேரத்தில் பணம் அல்லது டோக்கன் கொடுத்தால் கிராமத்து வாக்குகள் கிடைத்துவிடும்''’என அவர்கள் போட்டிருக்கும் கணக்குகளைக் கூறினார்.
திருவாரூர் வாக்காளர்களோ, ""இந்தக் கட்சி, அந்தக் கட்சின்னு நாங்க பார்க்கப் போவதில்லை. எங்களுக்கான தேவைகளை யார் செய்கிறார்களோ, செய்ய உத்தரவாதம் தருகிறார்களோ அவங்களுக்குத்தான் எங்களின் வாக்கு. திருவாரூர் மாவட்டத்தைப் பொறுத்தவரை, கலைஞர் இருக்கும்வரை எவ்வளவு செய்ய முடியுமோ, அவ்வளவு செய்தார். ஆனால் எம்.ஜி.ஆர்.-ஜெயலலிதா ஆட்சியில் எதையுமே செய்யல. திட்டமிட்டே திருவாரூரை அ.தி.மு.க. அரசு புறக்கணிக்கிறது. இந்தமுறை தி.மு.க. தலைவர் ஸ்டாலினோ, கலைஞர் குடும்பத்தில் முக்கியமானவங்களோ போட்டியிட்டால் கட்சி பாகுபாடு இல்லாமல் வாக்களிப்போம். தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் எங்கள் தொகுதி மீண்டும் வி.ஐ.பி. தொகுதியாக இருக்கும் நல்லது நடக்கும். தி.மு.க.வில் வேட்பாளர் மாறினால் எங்களின் மனநிலையும் மாறும்''’என்றார்கள்.
கஜா புயல் அடித்து ஐம்பது நாட்களைக் கடந்தும் இன்னும் நிவாரணம் பல கிராமங்களுக்கு கிடைக்கவில்லை என்பதால் ஆட்சியாளர்கள் மீது கொந்தளிப்பான மனநிலையில் மக்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் மத்திய அரசு சார்பில் சுமார் 1000 கோடி நிவாரண நிதி அறிவிக்கப்பட்ட அதேநாளில், இடைத்தேர்தல் தேதியை ஆணையம் அறிவித்தது. "புயல் நிவாரணம் வழங்குவதற்கு தேர்தல் விதிமுறைகள் தடையாக இல்லை என்றும் வங்கிகள் மூலம் நிவாரணத் தொகை வழங்கலாம்' எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருப்பது ஆளுந்தரப்புக்குத் தெம்பு தந்துள்ளது.
புயல் நிவாரணம் கோரி கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக நடந்த போராட்டங் கள் அ.தி.மு.க. அரசுக்கும் பா.ஜ.க. அரசுக்கும் டெல்டா மாவட்டத்தில் கடும் நெருக்கடியை உண்டாக்கியுள்ளன. அதனை மறைக்கவும், மற்ற 19 தொகுதிகளைத் தவிர்த்துவிட்டு, திருவாரூரை மட்டும் குறிவைத்து ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் இறக்கி, இடைத்தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்தவும் பா.ஜ.க.+அ.தி.மு.க. வகுத்துள்ள வியூகம், அ.ம.மு.க.வுக்கும் சாதகமாகியுள்ளது. இந்த மூன்று தரப்பையும் எதிர்கொண்டு, கலைஞரின் தொகுதியைத் தக்கவைக்க வேண்டிய கடும் சவாலில் இருக்கிறது தி.மு.க.
சவால்களுக்கிடையில் உதயசூரியனை உதிக்க வைக்க ஸ்டாலின் மேற்கொள்ளப் போகும் வியூகமும் களப்பணிகளுமே தேர்தல் முடிவைத் தீர்மானிக்கும்.
-க.செல்வகுமார்
__________
இதுவரை!
1977 தேர்தலில் தி.மு.க. சார்பில் தாழை மு.கருணாநிதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். 1980-ல் அ.தி.மு.க. கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் செல்லமுத்து வென்றார். 1984-ல் அதே செல்லமுத்து தி.மு.க. கூட்டணியில் நின்று வெற்றிபெற்றார். 1989, 91 தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தம்புசாமி வென்றார். 96, 2001 தேர்தலில் தி.மு.க.வின் அசோகனும் 2006-ல் தி.மு.க.வின் மதிவாணனும் வெற்றி பெற்றனர். தனித் தொகுதியிலிருந்து பொதுத் தொகுதியாக திருவாரூர் மாறிய பின் 2011, 2016 என இருமுறை கலைஞர் வென்றுள்ளார்.